இலங்கை குடும்பத்தை கொலை செய்த நபருக்கு சிறை: விவரம் செய்திக்குள்
கனடாவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேரைக் கொன்ற நபர் வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து கனடாவுக்கு வந்து பல ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்துவந்த தனுஷ்க விக்கிரமசிங்க, சமீபத்தில்தான் தன் மனைவியான தர்ஷனி பன்பரநாயக்க ஹமா வல்வே தர்ஷனி ஏகநாயக (35) பிள்ளைகள் இனுக விக்ரமசிங்க (7), அஷ்வினி விக்கிரமசிங்க (4), ரினியானா விக்ரமசிங்க (2) ஆகியோரை கனடாவுக்கு அழைத்துவந்திருந்தார்.

அதற்குப் பின் கனடாவில் மகள் கெல்லி விக்கிரமசிங்க பிறக்க, குடும்பம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.
கனடாவில் கல்வி கற்க வந்த இலங்கையரான ஃபெப்ரியோ டி ஸோய்சா (19) என்பவர் தனக்கு தங்க இடம் இல்லை என்று கூறியபோது, அவரை தன் வீட்டு அடித்தளத்தில் தங்கிக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் தனுஷ்க.
இந்நிலையில், கடந்த ஆண்டு, மார்ச் மாதம் 6ஆம் திகதி, இரவு 11.00 மணியளவில் பணி முடித்து தனுஷ்க வீடு திரும்பும்போது வீடு அமைதியாக இருந்திருக்கிறது. ஏன் வீடு அமைதியாக இருக்கிறது என எண்ணியவாறே வீட்டுக்குள் நுழைந்த தனுஷ்கவை திடீரென மார்பிலும் முதுகிலும் கத்தியால் குத்தியுள்ளார் டி ஸோய்சா.
காரணம் புரியாமல் திகைத்த தனுஷ்க, டி ஸோய்சாவைத் தடுக்க முயன்றதில் அவரது விரல்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், அவரது முகத்திலும் வெட்டு விழுந்திருக்கிறது.
அதற்குப் பிறகுதான் அவருக்குத் தெரிந்துள்ளது, தன் மனைவியையும் பிள்ளைகளையும், தங்கள் நண்பரான அமரகோன் (40) என்பவரையும் டி ஸோய்சா கொலை செய்துவிட்டார் என்பது.

தனுஷ்க, சத்தமிட்டபடி பக்கத்து வீட்டுக்கு ஓடி உதவி கேட்க, அவர்கள் அவசர உதவியை அழைக்க, பொலிசார் வரும்போது கையில் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் வீட்டு வாசலில் அமைதியாக உட்கார்ந்துள்ளார் டி ஸோய்சா.
தான் சரியாக படிக்காததால் தனது மாணவர் விசா ரத்தாகிவிடும், இலங்கையிலிருக்கும் தனது குடும்பமும் பணம் அனுப்பாது என்றும் பயந்ததாக தெரிவித்த டி ஸோய்சா, தன்னை நாடுகடத்திவிடுவார்கள் என்றும், தான் இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்றும், ஆகவே, திட்டமிட்டு தனுஷ்க குடும்பத்தையும், அமரகோனையும் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இரண்டு குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்திய டி ஸோய்சா தன் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு 25ஆண்டுகள் ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.