2 கோடி டொலர் பெறுமதியான தங்கக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர் நீதிமன்றில் வெளியிட்ட தகவல்
கனடாவில் பாரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் அமெரிக்காவில் ஆயுத குற்றச் செயல் குறித்த குற்றச்சாட்டுக்களை நிதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார்.
டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற தங்கக் கொள்ளையில் சுமார் 2 கோடி கனேடிய டாலர் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர், தற்போது அமெரிக்காவில் ஆயுதக் குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு சம்மதித்துள்ளார் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பிராம்ப்டன் நகரைச் சேர்ந்த டுராண்டே கிங்-மக்லீன் என்பவர், 2023 ஏப்ரல் 17ஆம் திகதி மாலை Air Canada நிறுவனத்தின் சரக்கு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 6,600 தங்கக் கட்டிகளும், கணிசமான வெளிநாட்டு பணமும் கொண்ட சரக்குகளை, விநியோக வண்டி மூலம் திருடி சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த தங்கமும், சுமார் 25 இலட்சம் டாலர் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும், அதே நாள் சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் இருந்து டொராண்டோவுக்கு வந்த Air Canada விமானத்தின் களஞ்சியப் பகுதியிலிருந்து கடத்தப்பட்டதாகவும், பின்னர் அந்தச் சரக்கு கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையின் சில மாதங்களுக்குப் பிறகு, போலீசார் கிங்-மக்லீனைத் தொடர்ந்தும் தேடி வந்தனர்.
ஆனால் 2023 செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள சாம்பர்ஸ்பர்க் பகுதியில், கிங்-மக்லீன் அங்கு வாடகைக்கு எடுத்திருந்த காரில் பயணிக்கும்போது அமெரிக்க போலீசால் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரது வாகனத்தில் 65 சட்டவிரோத ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தங்கக் கொள்ளையும், ஆயுதக் கைப்பற்றலும் ஒரே குழுவின் நடவடிக்கையாக இருக்கலாம் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் படி, கிங்-மக்லீன் "ஆயுதக் கடத்தல் சதியில்" ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த குற்றத்திற்கு அதிகபட்சமாக 15 வருட சிறை தண்டனை விதிக்க முடியும்.
மேலும், மே 14ஆம் தேதி பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பெர்க் நீதிமன்றத்தில், குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான விசாரணை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.