12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறை; எரிமலை வெடிப்பால் பல விமான சேவைகள் இரத்து
எத்தியோப்பியாவில் எரிமலை வெடித்து சிதறியதை அடுத்து,பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எரிமலை குழம்பிலிருந்து வெளியாகும் சாம்பல் புகை இந்தியாவை நோக்கி நகர்வதன் காரணமாகவே, பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறை
இது தொடர்பாக இந்திய விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்குப் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை இந்த எரிமலை சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளில் முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இந்த சாம்பல் மேகம் இந்தியாவின் ராஜஸ்தான், ஹரியானா மற்றும் டெல்லி பகுதிகளில் 25,000 முதல் 45,000 அடி உயரத்தில் பரவியுள்ளது. இந்த உயரத்தில் இருப்பதால், தரையில் உள்ளவர்களுக்கு சுகாதார ஆபத்து இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இந்திய விமான போக்குவரத்துத் தலைமை இயக்குநரகம் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அவசர ஆலோசனையை வெளியிட்டது. எரிமலை சாம்பல் பாதிக்கப்பட்ட வான்வெளி வழியாக பறப்பதை தவிர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விமானிகள் எஞ்சின் அசாதாரண செயல்பாடுகள் குறித்து உடனடியாக புகாரளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர் முன்னெச்சரிக்கையாக கொச்சியிலிருந்து துபாய் மற்றும் ஜெட்டாவிற்கு செல்லவிருந்த இரண்டு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், ஆம்ஸ்டர்டாம்-டெல்லி விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதாகவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.