இரவிரவாக தாக்குதல்களால் அதிரும் மத்திய கிழக்கு ; எச்சரிக்கும் அமெரிக்கா
ஈரான் மீது தொடர்ந்து 10-வது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரான் மீது தொடர்ந்து 10-ஆவது இரவாக தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க ராணுவம் நேற்று இரவு அறிவித்தது.

மற்றொரு அமெரிக்க ராணுவ வீரர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மேலும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான குவைத், ஜோர்டான் மற்றும் அமெரிக்க கடற்படையின் 5-ஆவது கடற்படைப் பிரிவு (5th Fleet) அமைந்துள்ள பஹ்ரைன் ஆகியவற்றின் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஈரானின் ராணுவ திறன்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கிலேயே இந்த சமீபத்திய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையம் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், ராஜதந்திர ரீதியில் நம்பிக்கைக்குரிய அறிகுறிகளும் தென்படுகின்றன; இமோதலில் முக்கிய மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தானுக்கு ஈரானின் உள்துறை அமைச்சர் பேச்சுவார்த்தைக்காக சென்றுள்ளார்.
சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் முறிந்துவிட்டது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பெருமளவு முடங்கியுள்ளது.
மேலும், சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பினரும் லட்சக்கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகளை தங்கள் தாக்குதல்களுக்கு இலக்காக்கியுள்ளனர்.