மத்திய கிழக்கு பதற்றம் ; ஈரானுடன் அமெரிக்கா இரகசியப் பேச்சு வார்த்தை ஆரம்பம்
அமெரிக்காவும் வளைகுடாவில் உள்ள அதன் நட்பு நாடுகளும் மத்திய கிழக்கில் பதற்றத்தை தணிக்க ஈரானுடன் இரகசியப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன.
ஷியைட் தேசத்தின் மீது பதிலடி கொடுக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் காசா மற்றும் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் விரிவான போர்நிறுத்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி தெரிவித்தது.
அந்த தகவல்களுக்கு அமைய, இம் முயற்சியில் இஸ்ரேல் தற்போது ஈடுபடவில்லை என்றும், ஆனால் இது குறித்து சிரேஷ்ட இஸ்ரேலிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சேனல் 12 செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், லெபனானில் போர் நிறுத்தம் செய்வதற்கான முக்கிய கோரிக்கையை தீவிரவாத அமைப்பு கைவிட்டதாக கூறப்படுகிறது. காசா பகுதியில் அமைதி ஏற்படும் வரையில் போர் நிறுத்தத்துக்கு உடன்பட மாட்டோம் என ஹிஸ்புல்லா இதுவரை கூறி வந்தது.
ஆனால் செவ்வாய்கிழமை (8) ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் நைம் காசிம், லெபனான் பாராளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெர்ரியின் போர் நிறுத்த முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.