சிக்கலில் மைக் டைசன்
பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார்.
டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக்கொண்டே இருந்தார்.
இதனால் பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக தாக்கினார்.
மாறி மாறி குத்துவிட்டதில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்து ஒரு வருடத்தை தாண்டிய நிலையில், டைசனிடம் குத்து வாங்கிய மெல்வின் டவுன்சென்ட், நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.
டைசன் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு அதிக மருத்துவச் செலவுகளை செய்ததாக கூறி, 3.50 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக டவுன்சென்டின் வழக்கறிஞர்கள் டைசனின் வழக்கறிஞர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
அதில், நஷ்ட ஈடு தொடர்பான உடன்பாடு எட்டப்படாவிட்டால் வழக்கு தொடரப்போவதாகவும் மிரட்டியுள்ளனர்.
ஐ.பி.எல். குறித்து ரிங்கு சிங்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அழுத்தமான சூழலில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவுகிறார் ரிங்கு சிங். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 22* (14), 31* (9), 46 (29) ரன்கள் குவித்து அதிரடியில் மிரட்டினார் ரிங்கு சிங்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட ஐபிஎல் தொடரும், கடுமையானப் பயிற்சியும் உதவியதாக ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது:
ஐபிஎல் போட்டிகளில் நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன்.
கடந்த 5-6 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறேன்.
ஐபிஎல் போட்டிகளில் விளையாடியது எனக்கு நம்பிக்கையளித்தது. நான் என்னை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்வேன் என்றார்.
சாதனை படைத்த வங்கதேசம்
முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் டேரில் மிட்செல் 44, இஷ் சோதி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
சனிக்கிழமையான நேற்று 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசி. வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் நயீம் ஹசன் 2 விக்கெட்டும் எடுத்தனா்.
நியூசி.க்கு எதிராக இது வங்க தேசத்தின் 2வது டெஸ்ட் வெற்றி.
தங்கள் சொந்த மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.
இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பிய்ன்ஷிப் புள்ளீப் ப்ட்டியலில் 2வது இடத்துக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.