ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடித் தாக்குதல் ; சரக்குக் கப்பல் கடலில் மூழ்கியது
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் மோதி சரக்குக் கப்பல் ஒன்று தீப்பிடித்து கடலில் மூழ்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் காரணமாக, சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் கூட்டாளி நாடுகளுடன் தொடர்புடைய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு ஈரான் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, நீரிணையின் சில பகுதிகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானியப் படைகள் பொருத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரானின் அனுமதியின்றி அபாயம் நிறைந்த பாதையொன்றில் பயணிக்க முயன்ற சரக்குக் கப்பல், புதன்கிழமை (ஒக்டோபர் 14) காலை கண்ணிவெடியில் மோதி கடலில் மூழ்கியதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் கடற்படைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுமார் 2,500 கொள்கலன்களை ஏற்றிச் சென்ற குறித்த கப்பல் கண்ணிவெடியில் மோதியதைத் தொடர்ந்து தீப்பிடித்து கடலில் மூழ்கியதாக அந்தப் படை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான போர் ஆரம்பமானதிலிருந்து, சரக்குக் கப்பலொன்று மூழ்கியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ள முதல் சம்பவம் இதுவாகும்.
எனினும், குறித்த கப்பலின் அடையாளம், அதில் பயணித்த மாலுமிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தற்போதைய நிலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.