இனவெறி குற்றச்சாட்டில் மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து (Miss Finland) பட்டம் வென்ற சாரா ஜாஃப்சே , ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் தனது கண்களை இழுத்துப் பிடித்துக் காட்டிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
அவர் பகிர்ந்த படத்திற்கு கீழே "சீனருடன் உணவு உண்ணுதல்"என்ற வாசகமும் இடம் பெற்றிருந்தது. இது ஆசியர்களை இழிவுபடுத்தும் இனவெறிச் செயல் எனப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இது குறித்து விளக்கமளித்த சாரா, தலைவலியைப் போக்கவே தான் அவ்வாறு செய்ததாகவும், அந்தப் புகைப்படத்தை நண்பர் ஒருவர் தனது அனுமதி இன்றிப் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் டிசம்பர் 8 அன்று இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.
இருப்பினும், மிஸ் பின்லாந்து அமைப்பு அவரது பட்டத்தைப் பறித்து உத்தரவிட்டது. "இனவெறி எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று அந்த அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
இந்த விவகாரம் இத்துடன் முடிவடையாமல், பின்லாந்தின் ஆளும் கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி அரசியல்வாதிகள் சாராவுக்கு ஆதரவாகத் தங்களது கண்களை இழுத்துப் பிடித்தபடி புகைப்படங்களை வெளியிட்டுச் சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தினர்.
இது ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து, பின்லாந்து பிரதமர் பெட்டரி ஓர்போ ஜப்பான் மற்றும் தென்கொரிய மொழிகளில் அதிகாரபூர்வமாக மன்னிப்புக் கடிதங்களை வெளியிட்டுள்ளார்.
"இந்தச் செயல்கள் பின்லாந்தின் சமத்துவ விழுமியங்களைப் பிரதிபலிக்கவில்லை.
இனவெறிக்கு எங்கள் நாட்டில் இடமில்லை" என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தால் பின்லாந்திற்கு வரும் ஆசியச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.