ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா ; முக்கிய ஸ்தலத்தை நோக்கி பறந்த ஏவுகணைகள்
ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில், 90 சதவீதம் நடக்கும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தியதாக, அமெரிக்கா நேற்று அறிவித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தது.
ஈரான் சர்வதேச கச்சா எண்ணெய் போக்குவரத்தை முடக்கியுள்ள நிலையில், அவர்களுக்கு அவர்கள் பாணியில் பதிலடி கொடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

கார்க் தீவு
ஈரானின் புஷேர் மாகாண கடற்கரையிலிருந்து 28 கி.மீ., துாரத்தில் பாரசீக வளைகுடாவில் கார்க் தீவு அமைந்துள்ளது. மொத்தம் 40 சதுர கி.மீ., பரப்பு கொ ண்ட சிறிய தீவு இது. இந்த தீவு, எண்ணெய் சேமிப்பு தொட்டிகள், ஏற்றுமதி முனையங்கள் மற்றும் எண்ணெய் வினியோக குழாய்களால் நிரம்பியுள்ளது.
கடல்சார் எண்ணெய் களங்களில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், குழாய்கள் வழியாக இந்த தீவுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து உலக சந்தைகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஆண்டுக்கு 95 கோடி பேரல் கச்சா எண்ணெய் இந்த மையம் வழியாக கையாளப்படுகிறது. ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியின், 90 சதவீதம் இங்கு தான் நடக்கிறது.
இந்நிலையில், அமெரிக்க விமான படை, இந்தத் தீவு மீது தாக்குதல் நடத்தியதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், “கார்க் தீவில் உள்ள ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினோம். ''ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்களின் பயணத்தை தடுக்கும் நடவடிக்கையை ஈரான் மேற்கொண்டால், தீவின் எண்ணெய் உட்கட்டமைப்புகளையும் தாக்குவோம்,” என்றார்.