அமெரிக்காவில் காணாமல் போன 9 வயது கனடிய சிறுமி சடலமாக மீட்பு
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் காணாமல் போன 9 வயது கனடிய சிறுமி மெலினா ஃப்ரட்டோலின் (Melina Frattolin) உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக நியூயார்க் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
லேக் ஜார்ஜ் (Lake George) பகுதியில் உள்ள I-87 நெடுஞ்சாலையின் Exit 22 அருகில் இருந்து தனது மகள் காணாமல் போனதாக 45 வயதான லூசியானோ ஃப்ரட்டோலின் (Luciano Frattolin) என்பவர் முறைப்பாடு செய்துள்ளார்.
பின்னர் அந்தக் காணாமல் போன சிறுமி கனடாவைச் சேர்ந்த மெலினா ஃப்ரட்டோலின் என அடையாளம் காணப்பட்டதாகவும், இது கடத்தல் சம்பவமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் ஆரம்பத்தில் எழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையை வழிநடத்திய வாரன் கவுண்டி போலீசார், சிறுமி காணாமல் போனதைச் சுற்றிய சந்தேகநிலை மற்றும் தந்தையின் விளக்கங்களில் முரண்பாடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
பல உள்ளூர் பாதுகாப்புப் பிரிவுகளின் உதவியுடன், ஞாயிற்றுக்கிழமை, லேக் ஜார்ஜிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில், நியூயார்க்-வர்மோண்ட் எல்லைக்கருகே உள்ள டைகாண்டரோகா (Ticonderoga) பகுதியில் மெலினாவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த விசாரணை நியூயார்க் மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது வரை இது கடத்தல் சம்பவமாகத் தெரிவிக்கப்படவில்லை என்றும், பொதுமக்களுக்கு எந்தவிதமான அபாயமும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.