58 சதவீத பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிக்கு தடை!
உலகளவில் 58 சதவீத பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி (Mobile Phone) பயன்பாட்டிற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ (UNESCO) தனது உலகளாவிய கல்வி கண்காணிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வகுப்பறைகளில் மாணவர்களின் கவனச்சிதறலைத் தவிர்க்கவும், இணையவழி மிரட்டல்கள் மற்றும் சமூக ஊடக பாதிப்புகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆண்களை விட பெண்கள் இருமடங்கு பாதிப்பு
குறிப்பாக, சமூக ஊடகப் பயன்பாட்டால் ஏற்படும் உணவுப் பழக்கவழக்க குறைபாடுகளால் ஆண்களை விட பெண்கள் இருமடங்கு பாதிக்கப்படுவதாகவும், 32 சதவீத இளம் பெண்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்திய பிறகு தங்கள் உடல் தோற்றம் குறித்துத் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில் 24 சதவீதமாக இருந்த இந்தத் தடையானது, தற்போது 114 கல்வி அமைப்புகளில் (58%) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ், பின்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இத்தடை அமுல்படுத்தப்பட்ட பிறகு மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட்டுள்ளதோடு, மனநல பாதிப்புகள் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.