மான்ட்ரியல் காவல் துறையில் இனவெறிப் புகார்: 4-வது அதிகாரி பணி இடைநீக்கம்!
கனடாவின் மான்ட்ரியல் நகரில் உள்ள 'ஸ்டேஷன் 39' காவல் பிரிவில் நடந்த இனவெறி மற்றும் தவறான நடத்தை புகார்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 4-வது காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மான்ட்ரியல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, இனவெறி மற்றும் முறைகேடு புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து மான்ட்ரியல் நோர்த் பகுதியில் செயல்பட்டு வந்த இந்தச் சிறப்புப் பிரிவு கடந்த ஜூன் மாதம் முழுமையாகக் கலைக்கப்பட்டது.
இந்த 4-வது அதிகாரியின் பணி இடைநீக்கம் கடந்த ஆகஸ்ட் 19 முதல் அமலுக்கு வந்துள்ளதாகக் காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் ஊழியர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எதிராக பாகுபாடு காட்டும் அல்லது இனவெறியைத் தூண்டும் செயல்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது; அதைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாது" என்று மான்ட்ரியல் காவல் துறை (SPVM) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த ஜூன் 12 அன்று மான்ட்ரியல் காவல் துறைத் தலைவர் ஃபடி டாகர் (Fady Dagher) நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், ஸ்டேஷன் 39-ஐ சேர்ந்த 16 அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 அதிகாரிகள் இனவெறி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார்.
அந்த இரண்டு அதிகாரிகளின் இடைநீக்கமும் ஒரே நபர் தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடையதாகும். அதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11 அன்று மற்றொரு நபர் தொடர்பான தனிப்பட்ட சம்பவத்தில் 3-வது அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தற்போது 4-வது அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மான்ட்ரியல் காவல் துறையின் தொழில்முறை தரநிலைப் பிரிவு இந்த விவகாரம் குறித்துத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.