ஒன்டாரியோவில் 1 மில்லியன் டொலர் மதிப்புள்ள போதைப்பொருட்கள் மீட்பு!
கனடாவின் தென்மேற்கு ஒன்டாரியோ பிராந்தியம் முழுவதும் நடத்தப்பட்ட விரிவான சோதனைகளில், 1 மில்லியன் டொலருக்கும் அதிக மதிப்புடைய சட்டவிரோத போதைப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட சொத்துக்களை ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை பறிமுதல் செய்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மாகாணம் முழுவதும் நிலவிய போதைப்பொருள் கடத்தல் குறித்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
பிராண்ட்போர்ட் மற்றும் பிராண்ட் கவுண்டி பகுதிகளில் ஒன்றும், லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் இன்னொன்றுமாக இரண்டு தனித்துவமான குற்றவியல் வலையமைப்புகள் சுதந்திரமாக இயங்கி வந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

பிராம்ப்டன் மற்றும் பாரிஸ் (Paris) பகுதிகளில் உள்ள 4 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. லண்டன் மற்றும் ஒனைடா நேஷன் பகுதியில் உள்ள வீடுகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
6.5 கிலோ ஃபென்டனில், 420 கிராம் கோகோயின் மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் மற்றும் பெருந்தொகைப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட ஃபென்டனில் போதைப்பொருள் மட்டும் தெருக்களில் சுமார் 65,000 பேரின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான அளவைக் கொண்டது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக 7 நபர்கள் மீது மொத்தம் 64 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இருவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.