அமெரிக்காவில் 16 வயது சிறுவனுக்கு துப்பாக்கி பரிசளித்த தாய்; 4 பேரைக் கொன்ற மகன்
அமெரிக்காவில், மழலையர் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய 16 வயது சிறுவனுக்கு அவரது தாய் துப்பாக்கி ஒன்றை பரிசாக அளித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ஒரிகான் மாகாணத்தில் உள்ள சில்வர் ரயில் தொடக்கப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமை 16 வயது சிறுவனான கிரிஃபின் ஜே ஜான் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 4 பேர் கொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு அங்கு சென்ற கெய்லப் கியாமன்கோ எனும் நபர் கிரிஃபின் ஜானை சுட்டுக்கொன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. கெய்லபின் 2 மகள்களும் தாக்குதல் நடைபெற்ற பள்ளியில் படித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்டு சுட்டுக்கொல்லப்பட்ட கிரிஃபினுக்கு அவரது தாயாரான ஷான்டை நிக்கர்சன் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப்பூர்வமாகத் துப்பாக்கி ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
மன அழுத்தம் காரணமா? அல்லது இனவெறித் தாக்குதலா? என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இந்தச் சம்பவமானது அமெரிக்காவில் நிகழாண்டில் (2026) துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்பட்ட 28 ஆவது படுகொலை என்பது குறிப்பிடத்தக்கது.