93 கொலைகளைச் செய்த அமெரிக்காவின் மிகப்பெரிய கில்லர் மரணம்
அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான கொலைகள் செய்த சீரியல் கில்லர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு வயது 80. அவர் 93 கொலைகளை செய்துள்ளதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். நீரிழிவு நோய், இதயக் கோளாறு மற்றும் பிற வியாதிகளால் பாதிக்கப்பட்ட சாமுவேல் லிட்டில் எனும் சீரியல் கில்லர் கலிபோர்னியா மருத்துவமனையில் இறந்தார் என மாநில திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
குறித்த நபர் பல கொலைகளுக்கு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தார். இது தொடர்பில் கலிஃபோர்னியா திருத்தங்கள் துறை செய்தித் தொடர்பாளர் விக்கி வாட்டர்ஸ் கூறுகையில், அவர் உடல்நலக் குறைவால் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
பல காலமாக சிறையின் உள்ளேயும் வெளியேயும் மாறி மாறி இருந்த ஒரு தொழில்முறை குற்றவாளியான சாமுவேல் லிட்டில், தான் யாரையும் கொல்லவில்லை என பல ஆண்டுகளாக மறுத்தார். பின்னர், 2018’ஆம் ஆண்டில், அவர் டெக்சாஸ் ரேஞ்சர் ஜேம்ஸ் ஹாலண்டிற்குத் இந்த வழக்கு மாற்றப்பட்டது.
அவர் ஒரு கொலை குறித்து அவரிடம் கேள்வி கேட்கும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் லிட்டில் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
ஆனால், ஏறக்குறைய 700 மணிநேர நேர்காணல்களின் போது, லிட்டில் தனக்கு மட்டுமே தெரிந்த பல படுகொலைகளின் விவரங்களை வழங்கினார். ஒரு திறமையான கலைஞரான அவர் ஹாலண்டிற்கு கொலையானவர்களின் டஜன் கணக்கான ஓவியங்கள் மற்றும் வரைபடங்களை வழங்கினார்.
சில சமயங்களில் அவர் பெயர்களை நினைவில் வைத்துக் கொண்டு அதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கொலை நடந்த ஆண்டு மற்றும் இருப்பிடம் மற்றும் அவர் உடலை எறிந்த இடம் போன்ற விவரங்களையும் எழுதினார்.
அவரது மரணத்தின் போது, 1970 மற்றும் 2005’க்கு இடையில் 93 பேரைக் கொன்றதாக லிட்டில் ஒப்புக்கொண்டார்.
பெரும்பாலான படுகொலைகள் புளோரிடா மற்றும் தெற்கு கலிபோர்னியாவில் நடந்தன. அவரது கூற்றுக்களை தொடர்ந்து விசாரிக்கும் அதிகாரிகள், கிட்டத்தட்ட 60 கொலைகளை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், மற்றவர்களை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.
“அவர் இதுவரை கூறிய எதுவும் தவறானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்றும் ஹாலண்ட் 2019’இல் கூறினார்.
கிரீன் ரிவர் கொலையாளி கேரி ரிட்ஜ்வே (49), ஜான் கேசி (33) மற்றும் டெட் பண்டி (36) போன்ற அமெரிக்க சீரியல் கில்லர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, சாமுவேல் லிட்டிலின் கொலைகள் மிக அதிகமாகும். லிட்டிலால் கொல்லப்பட்ட அனைவருமே பெண்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களில் பலர் விபச்சாரிகள், போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அல்லது சமூகத்தின் கீழ் மட்டத்தில் வாழும் ஏழை மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.