இந்திய தம்பதியை குழந்தையுடன் கடத்திய மர்ம கும்பல்
போர்ச்சுக்கலுக்கு குடிபெயர முயன்ற இந்திய தம்பதியை, மர்ம கும்பல் லிபியாவுக்கு கடத்திச் சென்றதுடன் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள பாதல்பூரா கிராமத்தைச் சேர்ந்தவர் கிஸ்மத்சின் சாவ்டா. மனைவி ஹீனா பென், 3 வயது மகள் தேவன்ஷியுடன் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் குடிபெயர சாவ்டா திட்டமிட்டார்.

கடத்தல்காரர்கள்
இதற்காக போர்ச்சுகலில் வசிக்கும் தன் சகோதரரின் உதவியுடன், முயற்சிகளை மேற்கொண்டபோது, ஒரு ஏஜன்ட் அவருக்கு உதவ முன்வந்தார்.
இதையடுத்து, ஆமதாபாதில் இருந்து துபாய் வழியாக போர்ச்சுக்கல் செல்ல கடந்த மாதம் 29ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், போர்ச்சுக்கல் செல்வதற்கு பதிலாக வட ஆப்ரிக்க நாடான லிபியாவின் பெங்காசிக்கு சாவ்டாவும் அவரது குடும்பமும் கடத்தப்பட்டனர்.
குஜராத்தின் மெஹ்சானாவில் உள்ள சாவ்டாவின் உறவினர்களை தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், மூன்று பேரையும் விடுவிக்க வேண்டுமெனில், 2 கோடி ரூபாய் தர வேண்டும் என மிரட்டல் விடுத்தனர்.
இதனால், பதறிப்போன உறவினர்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் முறையிட்டனர்.
அதன் அடிப்படையில், கடத்தப்பட்ட சாவ்டாவையும் அவரது குடும்பத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மெஹ்சானா கலெக்டர் பிரஜாபதி தெரிவித்துள்ளார்.