இனி மாஸ்க் கட்டாயமில்லை! முக்கிய நாடு எடுத்த திடீர் முடிவு
கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் பொது இடங்களில் இனி மாஸ்க் கட்டாயமல்ல என்ற அறிவிப்பை ஹாங்காங் வெளியிட்டுள்ளதுடன், புதன்கிழமை (01-03-2023) முதல் அமுலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
ஹாங்காங்கில் இனி பொது இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், பொது போக்குவரத்து உள்ளிட்ட முக்கிய பகுதிகள் எங்கும் மாஸ்க் கட்டாயமல்ல என ஹாங்காங் தலைவர் ஜான் லீ அறிவிப்பை இன்று (28-02-2023) வெளியிட்டுள்ளார்.
இந்த முடிவானது சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டுக்குள் ஈர்க்கும் என ஹாங்காங் நிர்வாகம் நம்புகிறது.
2019க்கு பின்னர் ரத்து செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்தவும் ஹாங்காங் திட்டமிட்டு வருகிறது.
சர்வதேச இசை விழா, எழுவருக்கான ரக்பி போட்டிகள் உட்பட பல திட்டங்களை ஹாங்காங் நிர்வாகம் வகுத்து வருகிறது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை ஹாங்காங் நிர்வாகம் நீக்கியிருந்தது.
தற்போது, 2020 ஜூலை 29 முதல் அமுலில் இருந்து வந்த முகக்கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாட்டையும் தற்போது நீக்கியுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சிக்கும் பொதுமக்கள் 1,275 டொலர் வரையில் அபராதம் செலுத்தும் நிலை இருந்தது. முகக்கவசம் கட்டாயம் என்ற விதியை கடுமையாக பின்பற்றி வந்த உலகில் கடைசி நாடு இந்த ஹாங்காங்.
தற்போது நீண்ட 959 நாட்களுக்கு பின்னர், முகக்கவசம் கட்டாயம் என்ற விதியை ஹாங்காங் நிர்வாகம் நீக்கி, பொதுமக்களுக்கு நிம்மதியாக மூச்சுவிட அனுமதி அளித்துள்ளது.