நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது ; டொனால்ட் ட்ரம்ப்
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது குறித்து, வெள்ளிக்கிழமை மாலை பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விருது வென்ற மரியா கொரினா மச்சாடோ, என்னைத் தொடர்புகொண்டு, அந்த விருதுக்கு நான்தான் உரியவன் என்று கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி டிரம்ப் கூறுகையில், உண்மையில் நோபல் பரிசு வென்றவர் என்னைத் தொடர்பு கொண்டு பேசினார். உங்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பரிசை நான் பெற்றுக் கொள்கிறேன். உண்மையில் இந்த பரிசுக்கு நீங்கள்தான் உரித்தானவர் என்று கூறினார். இது மிகவும் சிறந்தது என்று டிரம்ப் உள்ளம் குளிர்ந்து பேசியிருக்கிறார்.
ட்ரம்ப் புகழாரம்
மேலும், மச்சாடோவிடம் தான் கேட்டிருந்தால் தனக்கே விருதை வழங்கியிருப்பார் என்றும் டிரம்ப் கூறினார். நான், அப்படியானால் எனக்குக் கொடுங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அவர் மிகவும் நல்லவர் என்று டிரம்ப் புகழாரம் சூட்டியிருக்கிறார். இவர் பேசியது உண்மையா என்று பலரும் சந்தேகிக்கலாம், ஆனால் அது உண்மைதான் என்பதை உறுதி செய்யும் வகையில், மரியா, முன்பே தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இதனைப் பதிவிட்டிருந்தார்.
மரியா கொரினா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு அறிவித்ததன் மூலம், வெனிசுலா மக்களின் போராட்டத்துக்குப் பெரும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
துயரத்தில் உள்ள வெனிசுலா மக்களுக்கும் எங்கள் போராட்டத்துக்கு உறுதியான ஆதரவு அளித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இந்தப் பரிசை அா்ப்பணிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.