கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர் தற்காலிக வீசா அனுமதி விண்ணப்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கனடாவில் வெளிநாட்டு தொழிலாளர் தற்காலிக வீசா அனுமதி விண்ணப்பங்களில் பாரியளவு சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா அரசின் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததிலிருந்து, தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் (Temporary Foreign Worker) அனுமதி விண்ணப்பங்கள் 50% வரை குறைந்துள்ளதாக கனடிய தொழில்வாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் Employment and Social Development Canada (ESDC) தெரிவித்துள்ளது.
இந்த வீழ்ச்சியானது 2024 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதிமுறைகளுக்குப் பின்னர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த விதிமுறைகள், தொழிலாளர் அனுமதியைப் பெறுவதைக் கடினமாக்கி, கனடியப் பணியாளர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த விதிமுறைகளை மீறிய நிறுவனங்களிடமிருந்து மொத்தம் 4.9 மில்லியன் கனேடிய டாலர் அபராதம் வசூலித்துள்ளதாக கனடிய தொழில்வாய்ப்பு மற்றும் சமூக அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் இத்திட்டத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய அபராதம் அடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நியு பிரவுன்ஸ்விக் மாகாணத்தின் பெலேரோ ஷெல்பிஷ் ப்ரோசேசிங் நிறுவனம் மீது 1 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், 10 ஆண்டுகளுக்கு தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்திலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.