பிரிட்டனில் உக்கிரமடையும் ஒமிக்ரான் ; ஒரே நாளில் 78,000 பேருக்கு தொற்று
பிரட்டனில் ஒமைக்ரான் வைரஸ் உக்கிரமாகி வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரி்ட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு 3-வது அலை உக்கிரம் பெற்றுள்ளது.
அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஒரேநாளில் 78ஆயிரத்து 610 பேர் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாகும். பிரிட்டனில் 6.7 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் இதுவரை 1.10 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் (Boris Johnson) நேற்று அளித்த பேட்டியில்,
“ பிரிட்டனில் அதிக சக்தி வாய்ந்த, வேகமாகப் பரவக்கூடிய ஒமைக்ரான் வைரஸால்தான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. அடுத்துவரும் நாட்களில் பாதிப்பின் தீவிரம் மேலும் அதிகரிக்கக்கூடும்” என அவர் எச்சரித்தார்.
அதேவேளை அமெரிக்காவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒமைக்ரான் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) எச்சரிக்கையில்,
“இந்த குளிர்காலத்தில் அதிகமானோர் நோய் வாய்ப்படவும், அதிகமான உயிரிழப்புகள் நேரவும் வாய்ப்புள்ளது. இப்போது இருக்கும் ஒரே பாதுகாப்பு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே.
அமெரிக்கா கொரோனா பெருந்தொற்று பேராபத்தின் கடைசி அத்தியாயத்தை பதற்றத்துடன் எதிர்கொண்டுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முதல் டோஸை போட்டுக் கொள்ளுங்கள்.
தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளுமாறு அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். கடந்த நவம்பர் இறுதியில் ஒமைக்ரான் தொற்று தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
இதனால் மரணங்கள் இல்லை என்றாலும் அதிவேகமாகப் பரவுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
மேலும் இதுவரை ஒமைக்ரான் 77 நாடுகளில் பரவி உள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதல் தொற்று கண்டறியப்பட்ட மூன்று வாரங்களில் 77 நாடுகளுக்குப் பரவி இருப்பது அதன் பரவும் தீவிரத்தைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.