கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஒருவர் பலி
கனடாவில் இடம்பெற்ற விமான விபத்தில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை காலை சுமார் 11 மணியளவில் தென் கிழக்கு ஒன்டாரியோவில் இரண்டு சிறிய விமானங்கள் ஆகாயத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் ஓட்டாவாவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தென் கிழக்கில் உள்ள மார்டின்டவுன், சௌத் கிளெங்காரி பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணை
போலீசாரின் தகவலின்படி, மோதலில் ஈடுபட்ட இரண்டு விமானங்களில் ஒன்று — இரண்டு பைலட்டுகள் இருந்த Piper Seminole — பாதுகாப்பாக Cornwall விமான நிலையத்தில் தரையிறங்கியது.
மற்றொரு Cessna 172 விமானம் காட்டுப்பகுதியில் விழுந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதுடன், அதில் இருந்த ஒரே நபர் மரணமடைந்துள்ளார். “ஆகாயத்தில் மோதியபின் Piper விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியிருக்கிறது.
ஆனால் Cessna விமானத்தின் ஒரு சிறகு பிரிந்ததால் அது காட்டில் விழுந்து நொறுங்கியுள்ளது,” என கனடிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் மூத்த விசாரணையாளர் ஜீன்-பியர் ரேன்யே தெரிவித்துள்ளார்.
இரு விமானங்களும் Cornwall Aviation நிறுவனத்திற்குச் சொந்தமானவை மற்றும் சம்பவம் நடந்த நேரத்தில் பயிற்சி பறப்பில் ஈடுபட்டிருந்தன.
விபத்து நடந்த இடத்துக்கு மீட்புக் குழுவினர் பராசூட் மூலம் இறங்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.