முதியவர்களை குறிவைக்கும் இணைய மோசடிகள் ; புதிய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
இணைய மோசடிகளில் இருந்து முதியவர்களைப் பாதுகாப்பதில் அவர்களது உறவினர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என ‘அவாஸ்ட்’ (Avast) நிறுவனம் மேற்கொண்ட புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
உலகளவில் 12 நாடுகளில் 13,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், முதிய உறவினர்களைக் கொண்டவர்களில் 67 சதவீதமானோர், தாங்கள் மேற்கொண்ட ஒரு சாதாரண உரையாடல் அல்லது வழங்கிய வழிகாட்டல், தங்களது முதிய உறவினர்கள் இணைய மோசடிகளில் சிக்காமல் இருக்க உதவியதாக தெரிவித்துள்ளனர்.
முதியவர்களின் இணையப் பயன்பாடு குறித்து அவர்களது உறவினர்கள் அதிக கவனம் செலுத்தி வருவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் 90 சதவீதமானோர் தங்களது முதிய உறவினர்களின் இணையச் செயற்பாடுகளை கண்காணிப்பதாகவும், 34 சதவீதமானோர் அவர்களின் இணையப் பழக்கங்கள் ஆபத்தானவை எனக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஆய்வின்படி, முதியவர்களிடம் காணப்படும் ஆபத்தான இணையப் பழக்கங்களில் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்துவது 63 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
போலியான தகவல்கள் மற்றும் போலியான விளம்பரச் சலுகைகளை நம்புவது 59 சதவீதமாகவும், அறிமுகமில்லாத தொலைபேசி இலக்கங்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிப்பது 53 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
இணையம் மற்றும் தொலைபேசி மோசடிகளால் முதியவர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
முதிய உறவினர்களைக் கொண்டவர்களில் 68 சதவீதமானோர், தங்களது முதிய உறவினர்களில் குறைந்தது ஒருவர் மோசடி அல்லது அடையாளத் திருட்டுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடிகள் பெரும்பாலும் தொலைபேசி அழைப்புகள் 46 சதவீதம், சமூக வலைத்தளங்கள் 31 சதவீதம் மற்றும் மின்னஞ்சல்கள் 30 சதவீதம் ஊடாக இடம்பெறுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரான்சைப் பொறுத்தவரை, கடந்த 12 மாதங்களில் 15 சதவீதமானோர் இவ்வாறான மோசடிகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் 69 சதவீதமானோர் மோசடிக்காரர்களிடம் ஏமாந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.
பிரான்சில் உள்ள முதியவர்கள் பெரும்பாலும் மின்னஞ்சல்கள் மூலமாகவே இலக்கு வைக்கப்படுவதாகவும், மின்னஞ்சல் வழியான மோசடிகளின் விகிதம் 48 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலியான பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்களை அடையாளம் காண்பதிலும் மக்களிடையே சவால் காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது. உலகளவில் 56 சதவீதமானோர் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட பதிவுகளை தங்களால் இலகுவாக அடையாளம் காண முடியும் என நம்புகின்றனர்.
எனினும், பிரான்சில் இந்த எண்ணிக்கை 45 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது.
இதனால், முதியவர்கள் இணையத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப அறிவை வழங்குவதுடன், அவர்களது உறவினர்கள் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.