அமெரிக்கா தொடர்பில் ஒன்றாரியோ எடுத்துள்ள தீர்மானம்
கனடிய ஏற்றுமதிகள் மீது வரி விதிப்பதாக அமெரிக்கா அறிவித்ததனை தொடர்ந்து ஒன்றாரியோ மாகாணம் சில பதிலடி நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.
எனினும் இறுதி நேரத்தில் இந்த வரி விதிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒன்றாரியோ மாகாணத்தினால் உத்தேசிக்கப்பட்டிருந்த பதிலடி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டாக் போர்ட் இந்த தீர்மானங்களை எடுத்திருந்தார்.
அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பில் நல்ல செய்தி கிடைத்துள்ளதாகவும் இதனால் பதிலடி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாகவும் டாக் போர்ட் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பானது மாகாண பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
வரிவிதிப்பு தொடர்பில் குரல் கொடுத்த தொழிற்சங்கங்கள், பணியாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கனடியர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடிய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கிடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலை தொடர்ந்து வரி விதிப்பு தீர்மானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு அறிவிப்பை அடுத்து அமெரிக்கா மீது சில கெடுபிடிகளை விதிக்க ஒன்றரியோ மாகாண அரசாங்கம் திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.