10 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் வசித்து வந்த பெண்; வாழ்வை மாற்றிய பிரபலம்
10 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு, வீடு பரிசளித்ததுடன், அவர் தொழில் துவங்கவும் உதவி செய்தவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. டிக்டாக் பிரபலமான இசாயா கார்சா, 10 ஆண்டுகளாக வீடு இல்லாமல், தெருவோரம் வசித்து வந்த ராபின் என்ற பெண்ணுக்கு, டிக்டாக்கில் தன்னை பின்தொடர்பவர்களிடம் நிதி திரட்டி, அப்பெண்ணுக்கு வீடு ஒன்றை பரிசளித்துள்ளார்.
தெருவில் செருப்பு இல்லாமல் சென்ற ராபினை கண்டபோது, அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கார்சாவுக்கு உண்டாகி உள்ளது. முதலில், அவர் தங்கியிருந்த இடத்தில் காரை நிறுத்தி அவருக்கு புதிய ஆடைகள் சிலவும், குறிப்பிட்ட அளவு பணமும் தந்து உதவியிருக்கிறார்.
அதன் பின்னர் அடுத்தடுத்த சந்திப்புகளில், அவருக்கு, கழிப்பறை, உடைகள், மொபைல் போன் என பரிசுகளை தந்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். திடீரென ஒருநாள், அப்பெண்ணை ஒரு வீட்டிற்குள் அழைத்து செல்லும் கார்சா, இது உங்கள் வீடு, இங்கிருக்கும் அனைத்து பொருட்களும் உங்களுக்குதான்’’ என இன்ப அதிர்ச்சி அளிக்க, ஆனந்த கண்ணீர் வடிக்கிறார் ராபின்.
10 ஆண்டுகளாக தெருவில் வசிக்கும் ராபினுக்கு உதவ, GOFundMe என்ற பக்கத்தை உருவாக்கி அதில் நிதி திரட்டியிருக்கிறார் கார்சா. அத்துடன் அப்பெண்ணின் பிறந்த நாளுக்கு கேக் வெட்டி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். கார்சா, தனது டிக்டாக் பக்கத்தில் ராபினுடனான அனைத்து சந்திப்புகளையும், தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.
அவருக்காக தனது பாலோவர்களிடம், 58 ஆயிரம் டாலர் (42.5 லட்ச ரூபாய்) நிதி திரட்டி, அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ள கார்சாவுக்கும், அவரது டிக்டாக் பாலோவர்களுக்கும் நன்றி கூறிய ராபின், என் வாழ்க்கையையே நீங்கள் புரட்டி போட்டு விட்டீர்கள் என உருக்கமுடன் கூறியுள்ளமை நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது..