மோடி குறித்து ட்விட்டரில் அவதூறு; பணி நீக்கம் செய்த நிறுவனம்
இந்திய பிரதமர் மோடி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மூத்த விமானியை அதிரடியாக கோ ஏர் விமான நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. விமான கேப்டன் சில ட்வீட்களை வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
“கோ ஏர்’க்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை உள்ளது மற்றும் அனைத்து கோ ஏர் ஊழியர்களும் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சமூக ஊடக நடத்தை உள்ளிட்ட கொள்கைகளுக்கு இணங்க வேண்டியது கட்டாயமாகும். எந்தவொரு தனிநபரும் அல்லது ஒரு பணியாளரும் வெளிப்படுத்தும் தனிப்பட்ட கருத்துக்களுடன் விமான நிறுவனம் தன்னை இணைத்துக் கொள்ளாது.
கோ ஏர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கேப்டனின் சேவைகளை நிறுத்தியுள்ளது.” என்று கோ ஏர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முன்னதாக விமானி வெளியிட்ட ட்வீட் குறித்த விஷயத்தை அறிந்த விமான நிறுவனம், விமானியின் கருத்திலிருந்து விலகி அவர் மீது நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையில், பணியிலிருந்து நீக்கப்பட்ட கோ ஏர் விமானி ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதில், “பிரதமர் மற்றும் பிற தாக்குதல் ட்வீட்களைப் பற்றிய எனது ட்வீட்டுகளுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்புடைய யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருக்கலாம். கோ ஏர் எனது எந்தவொரு ட்வீட்டையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தனிப்பட்ட பார்வைகளாக தொடர்புபடுத்தவில்லை என்பதை நான் தெரிவிக்கிறேன். இதற்கு நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது செயல்கள் மற்றும் எனது தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். பின்விளைவுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்.” என குறித்த விமானி கூறியுள்ளார்.
முன்னதாக கோ ஏர் விமானி, ஜனவரி 7’ம் தேதி பிரதமருக்கு எதிராக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.