தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்: திவாலாகும் ஆசிய நாடு
கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தால், பாகிஸ்தானின் பயிர் சாகுபடி சுமார் 80 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த அக்டோபரில் கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து பற்றாக்குறை ஈடு செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 3 வாரங்கள் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வது கேள்விக்குறியாகி இருக்கிறது. மட்டுமின்றி, நாடு முழுவதும் கோதுமை மாவுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சலுகை விலையில் அரசு வழங்கும் கோதுமை மாவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மட்டுமின்றி, கோதுமை வாங்க திரண்ட மக்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்திருப்பதால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும். இலங்கையை போன்று அந்த நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.