ஆபத்தான நிலையில் உயிரை காப்பாற்றிய நர்ஸ்: கனேடியருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி
கனடாவின் ஒட்டாவா பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவரை காப்பாற்றிய செவிலியரை 10 ஆண்டுகளுக்கு பிறகு தேடிக் கண்டுபிடித்துள்ளார் ஒருவர்.
ஒட்டாவா பகுதியில் அமைந்துள்ள Bayshore வணிக வளாகத்தில் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்டார் டேவ் மர்ஃபி. அப்போது அவசர மருத்துவ உதவிப் பிரிவில் செயல்பட்டு வந்தவர் Joanne Overton McGregor.
இவரே சம்பவத்தன்று டேவ் மர்ஃபியின் உயிரை போராடி காப்பாற்றியவர். இந்த நிலையில், தமது உயிரைக் காப்பாற்றிய செவிலியரை ஒருமுறை நேரில் சந்தித்து நன்றி கூற வேண்டும் என தீவிரமாக தேடி வந்துள்ளார் டேவ் மர்ஃபி.
ஆனால் நீண்ட 10 ஆண்டுகளுக்கு பின்னரே, செய்தி ஊடகம் வாயிலாக டேவ் மர்ஃபியின் தேடுதல் நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளது. டேவ் மர்ஃபி தமது கதை தொடர்பில் செய்தி ஊடகத்தில் தெரிவிக்க, அதை கவனிக்க நேர்ந்த Joanne Overton McGregor, கடந்த ஜனவரி மாதம் தமது புகைப்படத்தை பகிர்ந்து, தொடர்புடைய செவிலியர் தாம் தான் என தெரிவித்துள்ளார்.
இதில் இன்ப அதிர்ச்சியடைந்துள்ள டேவ் மர்ஃபி, தற்போது தமது குடும்பத்தினருடன், குறித்த செவிலியரை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இருவரும் இணையமூடாக தொடர்பில் இருப்பதாகவும், மிக விரைவில் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும் டேவ் மர்ஃபி தெரிவித்துள்ளார்.