பயிற்சியின்போது கடலில் விழுந்த விமானம் ; 6 பொலிஸ் அதிகாரிகள் பலி
தாய்லாந்து நாட்டின் பெட்ஷப்ரி மாகாணம் சம்-அம் மாவட்டம் ஹு-ஹன் விமான நிலையத்தில் இருந்து போலீஸ் விமானப்படை பிரிவுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் நேற்று புறப்பட்டது.
பாராசூட் பயிற்சிக்கு புறப்பட்ட அந்த விமானத்தில் விமானி, பொலிஸ் சிறப்புப்படை அதிகாரிகள் உள்பட 6 பேர் பயணித்தனர்.
பாராசூட் பயிற்சிக்கு விமானம் பெட்ஷப்ரி மாகாணத்தில் உள்ள கடற்பரப்பில் பறந்துகொண்டிருந்தது. அப்போது, விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உயிரிழந்த 6 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.