அமெரிக்க விமான நிலையத்தில் பஸ் மீது மோதிய விமானம்! 5 பேர் காயம்
அமெரிக்க விமான நிலையத்தில் பயணிகள் பேருந்து மீது விமானம் மோதியதில் பஸ்சில் இருந்த 5 பேர் படுகாயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
நேற்றிரவு (11-02-2023) இந்த விமான நிலையத்தின் ஒரு வாயிலில் இருந்து விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு, விமானம் ஒன்று இழுத்து செல்லப்பட்டது.
அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக விமான பயணிகளை ஏற்றி செல்லும் பஸ் மீது விமானம் மோதியது.
இச்சம்பவத்தில் பஸ்சில் இருந்த 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இருப்பினும், விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.