364 பேரின் உயிரைக் காவு வாங்கிய விமானம்! 2.5 பில்லியின் அமெரிக்க டாலர் அபராதம்
விமான தயாரிப்பு நிறுவனங்களில் முக்கியமான நிறுவனம் போயீங் ஆகும். இந்நிறுவனம் தயாரித்த பல விமானங்கள் இன்று உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 737 மேக்ஸ் என்ற ரக விமானம் ஒன்றைத் தயாரித்தது.
இந்த விமானம் கடந்த 2 ஆண்டுகளில் இரண்டு முறை விபத்தில் சிக்கி சுமார் 346 நபர்களின் உயிரைப் பலி வாங்கியுள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் போயீங் நிறுவனம் இந்த 737 மேக்ஸ் ரக விமானத்தில் சில பாதுகாப்பு அம்சங்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து இந்நிறுவனத்தின் மீது தொடரப்பட்ட வழக்கில், அமெரிக்க நீதிமன்றம் இந்நிறுவனத்திற்கு 2.5 பில்லியின் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ1.8 லட்சம் கோடி) அபராதம் விதித்துள்ள நிலையில் பணத்தைச் செலுத்த போயீங் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இந்த பணத்தைப் பிரித்து இந்த விமானத்தால் உயிரிழந்த பயணிகள் மற்றும் ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்க அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. போயீங் நிறுவனம் இந்த 737 மேக்ஸ் என்ற விமானத்தைக் கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்த ரக விமானத்தை வாங்கிய இந்தோனேசியாவின் லயன் ஏர் குழுமம் இதை அவர்களது விமான நிறுவனம் மூலம் இயக்கும் போது கடந்த 2018ம் ஆண்டு மே 29ம் திகதி சர்வதேச கடல் எல்லையில் பறந்த போது விபத்தில் சிக்கியது. இரண்டாவது சம்பவமாகக் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் தேதி எத்தியோபியன் ஏர்லைன்ஸ் குழுமத்தில் இயங்கிய இந்த ரக விமானம் விபத்தில் சிக்கியது. இந்த இரண்டு விபத்திலும் விபத்தில் சிக்கியபோது விமானத்திலிருந்த யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
இரண்டு விபத்திலும் மொத்தம் 346 பேர் பலியாகினர். இந்த விபத்திற்குப் பிறகு தான் அந்நிறுவனம் விமானத்தில் பயன்படுத்திய சென்சாரில் தவறான ரீடிங்கள் வந்துள்ளது என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்நிறுவனம் அந்த ரக விமானங்களில் உள்ள தானியங்கி விமான கட்டுப்பாட்டு இயக்க முறையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
போயீங்க் 737 மேக்ஸ் ரக விமானத்தில் இந்த கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்ட பிறகு உலகம் முழுவதும் இயங்கி வந்த 400, போயீங் 737 மேக்ஸ் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு அந்த விமானங்களில் உள்ள கோளாறுகள் சரி செய்யப்பட்டுக் கடந்த நவம்பர் 2020ம் ஆண்டு தான் மீண்டும் பறக்க அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.