மகளின் படுக்கையறைக்குள் நுழைந்த இளைஞர்: தாயைக் கைவிட்ட சட்டம்
கனடாவில், தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்த பதின்மவயதுப் பெண்ணொருவரின் அறைக்குள் நுழைந்தார் பக்கத்து வீட்டில் வாழும் இளைஞர் ஒருவர்.
நீதிமன்றம் சென்றும், அவர் விரைவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகிலேயே மீண்டும் வாழும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்தப் பெண்ணின் தாய் தனக்கு நீதி கிடைக்கவில்லை என்கிறார்.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லண்டனில் அமைந்துள்ள வீடு ஒன்றில், தன் 13 வயது மகளுடன் வாழ்ந்துவருகிறார் பெயர் வெளியிட விரும்பாத பெண்ணொருவர்.
ஒரு நாள், அந்த 13 வயதுப் பெண் நள்ளிரவில் திடீரென கண் விழிக்க, பக்கத்து வீட்டில் வாழும் 27 வயது நபர், தன் அருகில் அமர்ந்து தனது பின்பக்கத்தைத் தடவிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறாள் அந்த 13 வயதுப் பெண்.
தயவு செய்து வெளியில் போங்கள் என்று கூற, தான் வந்த ஜன்னல் வழியாகவே வெளியில் சென்றுள்ளார் அந்த நபர்.
தாயிடம் கூறினால், தான் ஜன்னலை மூடாததால், தன் மீதுதான் தவறு என தாய் சத்தமிடுவார் என பயந்து, மறுநாள் காலையில்தான் விடயத்தைத் தாயிடம் கூறியிருக்கிறாள் அந்தப் பெண்.
மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய் பொலிசில் புகாரளித்துள்ளார்.
ஆனால், அந்த நபர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த குற்றத்துக்காக மட்டுமே அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதுவும், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை, நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டுவிட்டார். ஒரு ஆண்டுக்கு அவர் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருப்பார். அந்த காலகட்டத்தில் அவர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அருகில் செல்லக்கூடாது, இதுதான் அவருக்கான தண்டனை.
இதற்கிடையில், இன்னும் நான்கு மாதங்களில் அவரது நிபந்தனைக்காலம் முடிவடைய இருப்பதால், அவர் மீண்டும் தன் வீட்டுக்கே, அதாவது அந்த இளம்பெண்ணின் வீட்டுக்கு அருகிலுள்ள தன் வீட்டுக்கே வந்துவிடுவார்.
2027 பிப்ரவரி வரை அவர் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடவில்லையென்றால், அவர் மீது எந்த குற்றப் பின்னணியும் பதிவு செய்யப்படாது.
ஆக, சட்டம் கைவிட, பயந்துபோன அந்தத் தாய் தன் மகளை உறவினர் ஒருவரின் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். தற்போது, தன் மகளுடைய படுக்கையறைக்குள் நுழைந்த நபர் மீண்டும் தன் வீட்டுக்கு அருகில் வாழ வர இயலாதவகையில் தடை கோரி விண்ணப்பித்துள்ளார் அந்தப் பெண்.