முதல் முறையாக நேரில் சந்தித்த முக்கிய நாட்டு ஜனாதிபதிகள்!
பாலி - தைவான் விவகாரம் உள்பட பல விஷயங்களில் கடுமையாக மோதிக் கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்க மற்றும் சீன அதிபர்கள் முதல் முறையாக நேற்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலியில், ஜி - 20 எனப்படும் பெரும் பொருளாதார நாடுகள் கூட்டமைப்பின் கூட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden), சீன அதிபர் ஷீ ஜிங்பிங்(Xi Jinping) இடையே சந்திப்பு நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த இரு நாடுகளும், பொருளாதார மற்றும் ராணுவ பலத்தில் தங்களுடைய வலிமையை காட்ட முயன்று வருகின்றன.
கொரோனா பரவலுக்கு சீனாவே காரணம் என்ற விவகாரத்தில் துவங்கிய இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. தைவானை தன்னுடன் இணைக்க சீனா முயற்சித்து வருவதற்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பாலியில் நேற்று இரு தலைவர்களும் சந்தித்தனர். இருவரும் புன்னகையுடன் வரவேற்று, பரஸ்பரம் கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தனர். தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்து இரு தரப்பு உறவுகள் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.
அமெரிக்க அதிபராக இரண்டாண்டுக்கு முன் ஜோ பைடன்(Joe Biden) பதவியேற்றார். அதன்பின், ஜிங்பிங்குடன், ஐந்து முறை, தொலைபேசி மற்றும் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பேசியுள்ளார். முதல் முறையாக இரு தலைவர்களும் நேற்று நேரில் சந்தித்து பேசினர்.
இந்த பேச்சுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) கூறியதாவது:
சீன அதிபருடனான பேச்சுக்கு நான் எப்போதும் தயாராக உள்ளேன். பொறுப்புள்ள தலைவர்கள் என்ற முறையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகளை களைய வேண்டியது நம் பொறுப்பு. இரு தரப்பு உறவுடன், சர்வதேச பிரச்சனையில் இணைந்து செயல்பட வேண்டியது நம் கடமை என அவர் கூறினார்.
சீன அதிபர் ஷீ ஜிங்பிங் (Xi Jinping) கூறியதாவது:
சீனா, அமெரிக்கா இடையான உறவின் தற்போதைய சூழ்நிலையை இந்த உலகமே பெரும் எதிர்பார்ப்புடன் நோக்குகிறது. இரு நாட்டின் நலனுடன், சர்வதேச நலனையும் நாம் பார்க்க வேண்டும். சரியான பாதையில் நம்முடைய உறவு செல்லும் வகையில் செயல்படுவோம் என அவர் கூறினார்.