உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலத்தை மூடிய போராட்டம்!
பெரு நாட்டில் உள்ள உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத்தலமான மச்சு பிச்சு அரசாங்கத்திற்கெதிராக அங்கு இடம்பெற்றுவரும் போராட்டங்களால் மூடப்பட்டது.
தென்அமெரிக்க நாடான பெருவில் அமைந்துள்ள மச்சு பிச்சு உலகின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க மச்சு பிச்சு
இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரமான மச்சு பிச்சு, கஸ்கோ நகரிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலே உள்ள மலைத்தொடரில் அமைந்துள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டில் இந்த இடத்தை உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. 2017-ம் ஆண்டில் உலகின் புதிய 7 அதிசயங்கள் தேர்வு செய்யப்பட்டபோது, அதில் மச்சு பிச்சுவும் ஒன்றாக தேர்வானது.
ஆண்டு தோறும் 10 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் மச்சு பிச்சுவை பார்வையிடுகின்றனர். இந்நிலையில் பெருவில் அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் பாதுகாப்பு கருதி மச்சு பிச்சு மூடப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நாட்டின் சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போராட்டக்காரர்களால் ரயில் தண்டவாளம் சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து மச்சு பிச்சுவுக்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன.
பெரு அரசாங்கம் திடீரென மச்சு பிச்சுவை மூடியதால் அதனை சுற்றிப்பார்க்க சென்றிருந்த 400-க்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு சிக்கினர்.
அதனை தொடர்ந்து சுற்றுலா மற்றும் கலாசார அமைச்சகத்தின் ஏற்பாட்டில் பஸ்கள் மற்றும் ரயில்கள் மூலம் மச்சு பிச்சுவில் சிக்கிய சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
பெருவின் முன்னாள் ஜனாதிபதிபெட்ரோ காஸ்டில்லோ ஊழல் குற்றச்சாட்டில் பதவி பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் அரசுக்கு எதிராக கடந்த சில வாராங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் வன்முறைகளும் அரங்கேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.