தீவிரமடையும் போராட்டம் ; கடுமையாகும் சட்டம் - மெலோனியின் அதிரடி அறிவிப்பு
இத்தாலியின் மிலன் நகரில் அண்மையில் இடம்பெற்ற போராட்டம் மற்றும் சூறையாடல் சம்பவங்களைத் தொடர்ந்து, பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசாங்கம் புதிய கடுமையான பாதுகாப்புச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய சட்டங்களின் கீழ், ஆர்ப்பாட்டங்களின்போது குழுக்களாக இணைந்து தாக்குதலில் ஈடுபடுவோருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 20,000 யூரோக்கள் வரை அபராதமும் விதிக்கக்கூடிய வகையில் புதிய குற்றப்பிரிவொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர்களின் செயல்களுக்குப் பொறுப்பேற்கத் தவறும் பெற்றோருக்கு அபராதம் விதிப்பதுடன், ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டைச் செலுத்தவும் உத்தரவிடப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மிலன் நகரில் பாதுகாப்புப் பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் மேலதிகமாக 500 இராணுவ வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது மக்களின் உரிமை என்றாலும், தாக்குதலில் ஈடுபடுவதையும் நகரங்களின் சொத்துக்களைச் சேதப்படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.