கனடாவுக்கும் இது பொருந்தும்... ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி
ரஷ்யாவை எதிரியாக பாவிக்கும் கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு இனிமுதல் எரிவாயு விற்பனையை ரூபிள் நாணயத்திலேயே முன்னெடுக்க இருப்பதாக விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்த அறிவிப்பு, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலையை அதிகரிக்க செய்யும் என்றே கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக பெரும்பாலும் ரஷ்யாவையே நம்பியுள்ளது. ஆனால் பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த நிலையில், ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அடுத்தடுத்து சுமத்தியது.
இந்த நிலையில், தங்களை எதிரியாக பாவிக்கும் நாடுகளுக்கு பேரிடியாக இறங்கியது, புதன்கிழமை வெளியான விளாடிமிர் புடினின் அறிவிப்பு. எங்கள் எரிவாயு வேண்டுமானால், எங்கள் உள்ளூர் பணத்திலேயே வாங்குக என புடின் அறிவித்தார்.
போருக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், ரஷ்யா தற்போதும் எரிவாயு விநியோகம் முன்னெடுத்து வருகிறது. மேலும், தங்களுடன் இணக்கமாக இல்லாத நாடுகளின் பட்டியல் ஒன்றையும் ரஷ்யா வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள், பிரித்தானியா, ஜப்பான், கனடா, நார்வே, சிங்கப்பூர், தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் உக்ரைன் என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், அமெரிக்கா மற்றும் நார்வே நாடுகள் ரஷ்ய எரிவாயுவை வாங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.