பிரிட்டனில் வெறுப்புணர்வைத் தூண்டும் கொடிப் பிரச்சாரம்; முஸ்லிம் சமூகத்திற்குள் அச்சநிலை!
பிரிட்டனில் ‘Controversial flag campaign’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய ஒரு தேசிய கொடி பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள முஸ்லிம்கள் தாக்குதல்கள் மற்றும் வன்முறையை எதிர்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில், தெற்கு எசெக்ஸ் இஸ்லாமிய மையம் (South Essex Islamic Centre) என அறியப்படும் பாசில்டனில் உள்ள ஒரு மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் நோக்கம்
அதன் சுவர்களில் சிவப்பு நிறத்தில் “கிறிஸ்துவே அரசர்” (Christ is King) மற்றும் “இது இங்கிலாந்து” (This is England) போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த தாக்குதல், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சற்று முன்னதாக நடந்துள்ளது.
இந்த தாக்குதல் OperationRaisetheColours (நிறங்களை உயர்த்துவோம்) என்ற சமூக வலைத்தள பிரச்சாரத்தின் பின்னணியில் நடந்துள்ளது.
இந்தப் பிரச்சாரத்தில், குடியேற்றவாசிகளை எதிர்க்கும் தீவிர வலதுசாரி குழுக்கள், இங்கிலாந்தின் புனித ஜார்ஜ் கொடியை (Saint George’s Cross) பாலங்கள், மின்கம்பங்கள் மற்றும் பொது இடங்களில் பறக்கவிடுகின்றன.
இது ஒரு தேசபக்தி நடவடிக்கை என்று அவர்கள் கூறினாலும், இது இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வைத் தூண்டும் நோக்கம் கொண்டது என பலர் கருதுகின்றனர்.
‘Runnymede Trust’ என்ற இன சமத்துவ சிந்தனை மையத்தின் தலைவர் ஷப்னா பேகம், இந்த வன்முறைச் சம்பவங்கள் அரசியல் மற்றும் ஊடகங்களில் முஸ்லிம்கள் மீது உருவாக்கப்படும் எதிர்மறை பிம்பத்தின் விளைவு என்றும், இஸ்லாமிய வெறுப்புணர்வு பெருகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு பாசில்டன் கவுன்சிலின் தலைவர் மற்றும் பிரிட்டன் முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் வாஜித் அக்தர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை புனித ஜார்ஜ் கொடியை இத்தகைய வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பயன்படுத்துவது இங்கிலாந்து தேசத்திற்கு அவமானம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதல் நடந்த மசூதியில் உள்ளவர்கள், இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், பாதுகாப்பின்மை உணர்வு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாசில்டன் காவல்துறை இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவங்கள், பிரிட்டனில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்குள் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.