நுரையீரலில் வளர்ந்த பட்டாணிச் செடி ; அமெரிக்க மருத்துவர்களை ஆச்சரியப்படுத்திய அறுவை சிகிச்சை
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் நகரைச் சேர்ந்த ரோன் ஸ்வேடன் என்பவருக்கே இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரகையில்,
ஒரு சில மாத காலமாக குறித்த நபர், கடுமையான இருமலுடன் உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், அவர் தனக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருக்கலாம் என்று கருதியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவமனையில் அவருக்கு புற்றுநோய்க்கான பரிசோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், பரிசோதனையின் முடிவில் அவருக்கு புற்றுநோய் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த நபரின் நுரையீரலில் பட்டாணிச் செடி வளர்ந்திருந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சமைக்கப்படாத பட்டாணியை சாப்பிடும் போது, தவறுதலாக அது நுரையீரலுக்குள் சென்றுள்ளது.
இதையடுத்து, எப்படியோ அது வேர் ஊன்றி வளரத் தொடங்கிய நிலையில், நுரையீரலில் இருந்த தட்பவெப்பம் மற்றும் காற்று போன்றவை செடி வளர்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கலாம்.
இருப்பினும், இது நடப்பதற்கான சாத்தியம் இல்லாதது என்றே இதுவரை நினைத்திருந்தோம்” என தெரிவித்துள்ளனர்.
குறித்த பட்டாணி செடி 1.25 சென்றிமீற்றர் அளவுக்கு வளர்ந்திருந்த நிலையில் அறுவை சிகிச்சையில் செடி பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.