ஆப்கான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கனடா இரங்கல்
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கனடிய அரசாங்கம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிழக்கு ஆப்கானிஸ்தானை அதிரவைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கனடிய குடிமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று கனடாவின் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதிப்பிற்கு உள்ளான பகுதியில் அவசர உதவி தேவைப்படும் கனடியர்கள், கனடிய வெளியுறவு அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காக தொலைபேசி, எஸ்.எம்.எஸ், வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிறு இரவு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், குனார் மாகாணமும், நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரம் சுற்றியுள்ள பகுதிகளையும் கடுமையாக பாதித்தது.
தாலிபான் நிர்வாகம் தெரிவித்ததின்படி, இதுவரை 800 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலைமை மிகவும் பயங்கரமானது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளில், கனடா தனது மனிதாபிமான உதவியை வழங்கத் தயாராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.