ராஜபக்ஷ சகோதரர்கள் தடை: கனடா தூதருக்கு சம்மன் அனுப்பிய இலங்கை
ராஜபக்ச சகோதரா்களுக்கு தடை விதித்திருக்கும் முடிவு தொடர்பில் கனடா தூதருக்கு இலங்கை சம்மன் அனுப்பியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்ச சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர்.
ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) ஜூலையிலும், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மே மாதமும் இராஜினாமா செய்தனர்.
இதையடுத்து ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியாக பொறுப்பேற்றாா்.
இதற்கிடையில் இலங்கை முன்னாள் அதிபர்களான கோட்டாபய, மஹிந்த ராஜபக்ச உள்பட 4 பேர் கனடாவிற்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
மேலும் கனடாவில் உள்ள 4 பேரின் சொத்துக்கள் மற்றும் நிதி செயல்பாடுகள் முடக்கப்படும் என அறிவித்துள்ளது.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக 4 பேர் மீதும் கனடா நாடு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த 4 பேருக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டது தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட இலங்கை வெளியுறவு அமைச்சகம், கொழும்புவில் உள்ள இலங்கைக்கான கனடா தூதரை வரவழைத்து, இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தின் அதிருப்தியை வெளிப்படுத்தியது.