போருக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு கடத்தப்படும் உக்ரைன் மக்கள்: வெளிவரும் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலின் சில பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றியதில் இருந்து பொதுமக்கள் சட்டவிரோதமாக ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், இதுவரை சுமார் 15,000 அப்பாவி பொதுமக்கள் சட்டவிரோதமாக ரஷ்யாவுக்கு கடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக 400,000 மக்கள் வசிக்கும் மரியுபோலில் சிக்கியுள்ள பொதுமக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் ஏதுமின்றி அவநம்பிக்கையான அவலநிலையை எதிர்கொள்வதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே, உள்ளூர் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தகவலில், ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் எல்லையைத் தாண்டி பலவந்தமாக பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர், ஆனால் இன்னும் துல்லியமான எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஆனால், உக்ரைன் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர் என்றே ரஷ்ய தரப்பு குறிப்பிட்டு வருகின்றது.