கனடாவின் மாபெரும் தங்கக் கொள்ளை வழக்கு! பிரதான சந்தேக நபருக்கு எதிராக விசாரணை
கனடா வரலாற்றிலேயே மிகப்பெரிய தங்கக் கொள்ளைகளில் ஒன்றாகக் கருதப்படும் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் மீதான நீதிமன்ற விசாரணை, ஒன்டாரியோவின் பிராம்ப்டன் நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டொராண்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த மாபெரும் கொள்ளை வழக்கில், பர்ம்பால் சித்து என்பவர் மீது 5,000 டொலருக்கு அதிகமான தொகையைத் திருடியது மற்றும் சதித்திட்டம் தீட்டியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அலி ரசா என்ற நகைக்கடை உரிமையாளர் மற்றும் அமித் ஜலோட்டா ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் கடந்த மாதம் திரும்பப் பெற்ற நிலையில், பர்ம்பால் சித்து மீதான விசாரணை தற்போது தொடங்கியுள்ளது.

அதேவேளையில், இந்தக் கொள்ளையில் தனது பங்கை ஒப்புக்கொண்ட அர்சலான் சவுத்ரி என்பவருக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
துபாயிலிருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்ட அவர், திருடப்பட்ட 22 மில்லியன் டொலர் தொகையை 40 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2023 ஏப்ரல் 17 அன்று பியர்சன் விமான நிலையத்திலிருந்து 400 கிலோவிற்கும் அதிகமான எடைகொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் பல கோடி மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் திருடப்பட்டன.
இவற்றின் அப்போதைய மதிப்பு 20 மில்லியன் டொலருக்கும் அதிகம் என பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்திருந்தது. சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஏர் கனடா விமானம் மூலம் டொராண்டோ கொண்டுவரப்பட்ட இந்தத் தங்கக் கட்டிகள், விமான நிலையத்தின் சரக்கு மையத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அன்றைய தினம், போலி ரசீது ஒன்றைச் சரக்கக ஊழியர்களிடம் காண்பித்த நபர் ஒருவர், 5 டன் லாரியில் அந்தத் தங்கக் கட்டிகளை ஏற்றித் தப்பிச் சென்றதாகக் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது.