கனடா, அமெரிக்காவில் தோன்றிய வளைய சூரிய கிரகணம்
கனடா, அமெரிக்காவில் நாசா அறிவித்ததை போன்று சூரிய கிரகணம் தோன்றியுள்ளது.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் சூரிய கிரகண நிகழ்வு ஏற்படுகிறது. அதேசமயம், பூமியில் இருந்து சந்திரன் அதிக தூரத்தில் இருக்கும் போது இந்த கிரகணம் ஏற்பட்டால், சூரியன் வளையம் போன்று காட்சியளிக்கும்.
இது வளைய சூரிய கிரகணம் எனப்படுகிறது. கனடா, ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் வளைய சூரிய கிரகணத்தை காணலாம் என நாசா அறிவித்தது.
இதன்படி, வியாழன்கிழமை காலை கனடாவின் Ontario மாகாணம் மற்றும் வடக்கு அமெரிக்காவில் சூரியகிரகணம் தென்பட்டது. சிறப்பு தொலைநோக்கி மூலம் சூரிய கிரகணத்தை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நார்வேவின் ஒஸ்லோ, இங்கிலாந்தின் scarborough பகுதிகளிலும் வளைய சூரிய கிரகணம் தோன்றியது. பொதுமக்கள் தொலைநோக்கி மற்றும் சூரிய கண்ணாடியை பயன்படுத்தி கிரகணத்தை பார்த்தனர். ஜெர்மனியின் தென்மேற்கு பகுதி, நியூ ஜெர்சி, அமெரிக்காவின் சில பகுதிகள், லண்டன், கிரீன்லாந்து, வடக்கு ரஷ்யா போன்றவற்றில் வளைய சூரிய கிரகணம் தெரிந்தது.
அதேவேளை இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் மட்டும் சூரிய மறைவின்போது கிரகணம் தென்பட்டது.