கனடாவில் கோர விபத்து: இரண்டு பதின்ம வயதினர் பரிதாப மரணம்!
கனடாவின் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் உள்ள மான்க்டன் பகுதி அருகே திங்கள்கிழமை இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு பதின்ம வயதினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இரவு 7:25 மணியளவில் பெரில் மில்ஸ் வீதி மற்றும் ஸாக் வீதி சந்திப்பில் கார் ஒன்றும் எஸ்.யு.வீ ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
காரானது கட்டுப்பாட்டை இழந்து நடுக் கோட்டைக் கடந்து சென்று எதிரே வந்த எஸ்.யு.வி வாகனத்துடன் மோதியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு வாகனங்களிலும் தலா 5 பேர் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 வயது சிறுமி மற்றும் 18 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 16 வயது சிறுவன் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 வயது சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். காரை ஓட்டிச் சென்ற 25 வயது நபர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் மீது தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக பொலிஸார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவின் அர்கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த 24 முதல் 72 வயது வரையிலான 5 நபர்களும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.