ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் ஈரான் குறித்த தீர்மானத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் ஹோர்மூஸ் நீரிணை குறித்த தீர்மானத்திற்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வளைகுடா நாடுகள் கொண்டு வந்த வரைவுத் தீர்மானத்தை, ஐநா பாதுகாப்பு பேரவையில் ரஷ்யாவும் சீனாவும் தங்களது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்துள்ளன.
இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 11 நாடுகள் வாக்களித்தன. பாகிஸ்தான் மற்றும் கொலம்பியா ஆகிய இரண்டு உறுப்பு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

பல வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னா், இந்தத் தீர்மானம் பலமுறை மாற்றியமைக்கப்பட்டது.
ஆரம்பத்தில் 'அத்தியாயம் VII' (இராணுவ பலத்தைப் பயன்படுத்த அனுமதிப்பது) என்பதன் கீழ் கொண்டு வரப்பட்டது.
பின்னர் அது நீக்கப்பட்டு, "தேவையான அனைத்து தற்காப்பு வழிமுறைகளையும் பயன்படுத்த நாடுகளுக்கு அதிகாரம் அளித்தல்" என மாற்றப்பட்டது.
இறுதியாக, தற்காப்பு முயற்சிகளை "வலுவாக ஊக்குவித்தல்" என்ற நிலைக்குத் தீர்மானம் தளர்த்தப்பட்டது. இருப்பினும், ரஷ்யாவும் சீனாவும் இதற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளன.
பஹ்ரைன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லத்தீப் பின் ரஷீத் அல் ஜயானி தலைமையில் இந்தக்கூட்டம் நடைபெற்றது.
இந்தத் தீர்மானம் ஒரு புதிய சூழலை உருவாக்கவில்லை; மாறாக, ஈரானின் தொடர்ச்சியான பகைமைப் போக்கிற்கு இது ஒரு தீவிரமான பதிலடி. மிக முக்கியமான இந்த நீர்வழிப் பாதையை ஈரான் ஆயுதமாகப் பயன்படுத்துவதை பாதுகாப்பு பேரவை தடுக்கத் தவறினால், அது உலகிற்குப் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.
இது மற்ற நீரிணைகளிலும் தொடர வாய்ப்புள்ளது, இது உலகத்தை ஒரு காட்டாட்சியாக (Jungle) மாற்றிவிடும்," என அல் ஜயானி எச்சரித்துள்ளார்.