இழந்த குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா
குர்ஸ்க் பிராந்தியத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியது
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
ரஷ்ய படையினருக்கு புதின் வாழ்த்து
இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இருந்த போதிலும் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
அதே போல் உக்ரைனும் தாக்குதல் நடத்துகிறது. இப்போரில் ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் சுமாா் 1,300 கி.மீ. நிலப்பரப்பை உக்ரைன் ராணுவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைப்பற்றியது. இப்பகுதியை மீட்க ரஷ்ய ராணுவம் தீவிரமாக சண்டையிட்டது.
இந்த நிலையில் குர்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியிருந்த உக்ரைன் படையினா் அனைவரும் வெளியேற்றப்பட்டு அப்பகுதியை முழுமையாக மீட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து ரஷ்ய அதிபா் புதினின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறும்போது, குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து உக்ரைன் படையினா் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டு விட்டனா். இந்தத் தகவலை அதிபா் புதினிடம் ரஷிய முப்படை தளபதி வேலரி கெராஸி மொவ் தெரியப்படுத்தினாா் என்றார்.
இதையடுத்து குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக மீட்டதற்காக ரஷ்ய படையினருக்கு புதின் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அந்தப் பிராந்தியத்தில் ஊடுருவி, ரஷ்யாவை அடிபணிய வைக்கும் உக்ரைனின் திட்டம் படுதோல்வி அடைந்ததாக புதின் தெரிவித்தார்.
ஆனால் குர்ஸ்க் பிராந்தியத்தை கைப்பற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளதை உக்ரைன் மறுத்து உள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவம் கூறும்போது, குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படையினரின் முன்னேற்றத்தை எங்களது ராணுவம் தொடா்ந்து தடுத்து நிறுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளது.