உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதலுக்குத் திட்டம்? அவசர எச்சரிக்கை விடுத்த ஜெலென்ஸ்கி
ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்க அதிபரின் தூதர்கள் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் உக்ரைன் புதிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபரின் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோருடன் இணையவழியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி மற்றும் போலந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளும் இதில் முழுமையாகப் பங்கேற்றதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
அபுதாபியில் அமெரிக்கா, உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் முதன்முறையாக முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்திய ஒரு வாரத்திற்குள் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜெலென்ஸ்கி, இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த முயற்சிகள் வீணாகாது என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் பேச்சுவார்த்தைக் குழு ஆக்கபூர்வமான முறையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இந்தப் பேச்சுவார்த்தைகள் எளிதானதாக இருக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதுதொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை.
இதேவேளை, உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் கூட்டணியுடன் ஜெர்மனியின் பெர்லின் நகரில் மீண்டும் சந்திப்பொன்றை நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது இரவு நேர காணொளி உரையில் கருத்துத் தெரிவித்த அவர், திங்கட்கிழமை மாலை முதல் இரவு முழுவதும் மற்றும் செவ்வாய்க்கிழமையும் உக்ரைனின் இலக்குகள் மீது ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்தக்கூடும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், வட கொரியா ரஷ்யாவுக்கு புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை வழங்கி வருவதாகவும், ரஷ்யா தனது ஆயுதத் திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருவதாகவும் உளவுத்தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் ஒருபுறம் தீவிரமடைந்துள்ள நிலையில், மறுபுறம் ரஷ்யாவின் சாத்தியமான தாக்குதல்கள் குறித்த அச்சமும் உக்ரைனில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.