அஸர்பைஜான் விமான விபத்துக்கு வருத்தம் தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி
அஸர்பைஜான் விமானம் விபத்துக்குள்ளானமை தொடர்பில், அந்நாட்டு ஜனாதிபதிக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் கிரம்ளின் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர்பைஜான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ரஷ்யாவின் க்ரோஸ்னி நோக்கிப் பயணித்த போது கடந்த 26 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் 38 பேர் உயிரிழந்ததுடன், காயமடைந்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 29 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்தநிலையில், ரஷ்ய வான் பாதுகாப்புப் படை தவறுதலாக விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் என பல கருத்துகள் வெளிவந்தாலும், அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியேவுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் விளக்கமளித்துள்ளார்.
ரஸ்யாவின் க்ரோஸ்னி, மோஸ்டாக், உள்ளிட்ட நகரங்களில் யுக்ரைன் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருவதன் காரணமாக அதனை முறியடிக்கும் நோக்கில் ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தமது வருத்தத்தை தெரிவிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார்.