கனடாவில் பாடசாலை பேருந்து கோர விபத்து – ஒரு மாணவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்
கனடாவின் கியுபெக் மாகாணத்தில் பாடசாலை பேருந்து கவிழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன் மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சயின்ட் ரொஸ் டி வாட்போர்ட் என்ற சிறிய நகரில் சனிக்கிழமை காலை சுமார் 8.30 மணியளவில் இடம்பெற்றதாக கியுபெக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குப் பின்னர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர் ஒருவர் பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் நண்பகல் அளவில் உறுதிப்படுத்தினர்.

இந்த விபத்தில் காயமடைந்த 17 பேரில் நான்கு மாணவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், பேருந்து சாரதியும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தற்போது காயமடைந்தவர்களில் எவருடைய உயிருக்கும் ஆபத்து இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேர்ந்த இடத்திற்கு சென்ற அதிகாரிகள், சாலையின் ஓரத்தில் பேருந்து கவிழ்ந்த நிலையில் இருந்ததை கண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
அப்பகுதியில் நிலவிய பனிப்படர்ந்த சாலை நிலைமை இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.