உலக மக்களுக்கு காத்திருக்கும் பேராபத்து ; எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
உலகம் முழுவதும், அதிகரித்து வரும் வெப்பம், மைக்ரோபிளாஸ்டிக், பிளாக் கார்பன் மற்றும் அசாதாரண மழைப்பொழிவு காரணமாக பனிப்பாறைகள் முன்பை விட வேகமாக உருகி வருகின்றன என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும், 99% பனிப்பாறைகள் 0.02 முதல் 2.68 மி.மீ. வரை உருகி வருவது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
இதில், இமயமலை மிக அதிக ஆபத்தை எதிர்கொள்கிறது. குறிப்பாக மேற்குப் பகுதியில் ஜூன் 2024ஆம் ஆண்டில், சுத்ரி டாக்கா பனிப்பாறை அதன் பனி ஆழத்தில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.
அவசர காலநிலை நடவடிக்கை
இதில், இந்தியா, பாகிஸ்தான், பெரு மற்றும் சீனா ஆகியவை மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. உருகும் பனிப்பாறைகள், நிலையற்ற பனிப்பாறை ஏரிகளை உருவாக்குகின்றன.
இவை வெடித்தால், அவை பேரழிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக, 15 மில்லியன் மக்கள் அச்சுறுத்தலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும், குறிப்பாக இமயமலை மற்றும் ஆண்டிஸில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளங்கள் (GLOFs) 120 கிலோ மீட்டர் வரை பயணித்து, அவற்றின் பாதையில் உள்ள அனைத்தையும் அழித்துவிடும்.
1993ஆம் ஆண்டு முதல் பனிப்பாறை உருகி வருகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே கடல் மட்டம் 10 செ.மீ. உயர்ந்துள்ளது. அண்டார்டிகாவின் "டூம்ஸ்டே பனிப்பாறை" உருகினால், கடல்கள் 3 மீட்டர் உயர்ந்து, கடலோரப் பகுதிகள் மற்றும் தீவுகளை மூழ்கடிக்கும். அதேபோல், மாலத்தீவுகள், துவாலு, கிரிபட்டி, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்தின் மூன்றில் ஒரு பங்கு கூட மிகவும் ஆபத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகின் பனிப்பாறைகளில் பாதி உருகக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில், அவசர காலநிலை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உலகம் வெள்ளம், வறட்சி, உணவு நெருக்கடிகள் உள்ளிட்டவற்றை எதிர்காலத்தில் சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.