பாரிஸ் 19-வது வட்டாரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது ; போதைப்பொருள் வலையமைப்புக்கு கடும் அடி
பாரிஸ் மாநகரின் 19-வது வட்டாரத்தில் (19e Arrondissement) நீண்டகாலமாகத் தலைவிரித்தாடி வரும் 'க்ராக்' (Crack) போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகளின் பலனாக, கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சுமார் 1,940 பேர் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பாரிஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, தொடருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள பதற்றமான சூழலைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

போதைப்பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாரிஸ் காவல்துறை (Préfecture de Police) விரிவான பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வீதிகளில் காவல்துறையினரின் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஆளில்லா வானூர்திகள் (Drones) மூலம் வான்வழிக் கண்காணிப்பும், நடமாடும் கண்காணிப்பு மையங்களும் (Postes d'accueil mobiles) களமிறக்கப்பட்டுள்ளன.
ரோசா-பார்க்ஸ் (Rosa Parks) தொடருந்து நிலையம், செசாரியா-எவோரா வீதி (Rue Cesaria-Évora) மற்றும் மக்டொனால்ட் நிழற்சாலை (Boulevard Macdonald) ஆகிய பகுதிகள் போதைப்பொருள் பாவனையாளர்கள் அதிகம் கூடும் இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் தினசரி முன்னெடுக்கப்படும் அதிரடிச் சோதனைகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புகளின் காரணமாக நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மீண்டும் அப்பகுதிகளில் ஒன்று கூட முயற்சிப்பவர்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்படுவதால், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, பி.என்.பி பரிபாஸ் (BNP Paribas) வங்கி நிர்வாகமும் தனது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரோசா-பார்க்ஸ் தொடருந்து நிலையத்திற்கு அருகே தனியார் பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தியுள்ளது.
நீண்டகாலமாக பாதுகாப்பு அச்சத்தில் வாழ்ந்து வந்த 19-வது வட்டார மக்களுக்கு, காவல்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் ஓரளவு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.